Wednesday, February 8, 2012

யாழ் சோனகதெரு 2012 - உணர்வுகளின் கண்காட்சி

   “வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி காண்பதில்லை.
(சந்திரபாபுவின் பாடல் வரிகள்)
அபூ மஸ்லமா: யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்ற பின்பு நாம் யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கு சில விடயங்களை ஞாபகபடுத்த விரும்புகிறோம்.... எம் அன்பிற்குரிய சகோதரர்களே, சகோதரிகளே...... நாம் முஸ்லிம்களின் ஒன்று கூடலை எதிர்க்கும் மறைநிலை சிந்தனையாளர்கள் (நெகடீவ் திங்கர்ஸ்) அல்ல.
 :
மாறாக யாழ்ப்பாண முஸ்லிம் தலைமுறையின் எதிர்கால நலன்களிற்காக சிந்திப்பவர்கள், அதற்காக உழைப்பவர்கள். சுயநலவாத, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அல்ல. சடவாத உலகியல் ஒழுங்கிற்கு ஆட்பட்டவர்களும் அல்ல. மார்க்கத்தை வளைத்து அந்நிய சமூகங்களுடன் உறவுகளை பலப்படுத்துபவர்களும் அல்ல.
நாம் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பெரும்பாலான முஸ்லிம் உறவுகளுடன் யாழ் நிகழ்வுகள் தொடர்பாக அலவளாவினோம். அவர்கள் பேசியதையும் விட நிறைய விடயங்களை அவர்கள் உள்ளங்கள் பேசின. அவர்களின் இதயங்களின் வாசிப்பின் பின்னர் எமக்கு கிடைத்த தெளிவு என்னவென்றால் “யாழ்ப்பாண முஸ்லிம்கள் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை ஆவலோடும் உவகையோடும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே. இந்திய இரசிகர்கள் நேசிக்கும் “இந்தியன் பிரிமியர் லீக் 20-20” கிரிக்கட் மெட்ச் போல.
அவர்கள் இதனை மார்க்க விதிகளை முன்னிறுத்தி பார்க்க தயாராக இல்லை.
சமூகவியலின் அடிப்படையில் “இது முஸ்லிம்களிற்கு பலம் சேர்க்கும் ஒரு நிகழ்வாகவே” பார்க்கிறார்கள். தாம் தெரிந்தே இந்த ஒன்று கூடலை விரும்பியதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கிறார்கள்.
 ஜேர்மனியர்கள் அடோல்ப் ஹிட்லரிற்கு பின்னால் அணிதிரள ஆரம்பித்தது உண்மையில் அவரின் இராணுவ வெற்றிகளின் பின்னரல்ல. மாறாக அவர் எழுதிய “மெயின் கேம்ப்” புத்தகத்தாலும் அல்ல. “ஹிட்லர் அறிமுகப்படுத்திய சினிமா” மூலமாகவே மக்கள் அவரை வெகுவாக விரும்பினர். கேளிக்கை அரங்குகள், நாடக கொட்டகைகள் என அவர் கோயபல்ஸின் உதவியுடன் மக்களை உல்லாசத்தின்பாலும், புத்தணற்சியின்பாலும் அழைத்துச் சென்றதே அவரை மக்கள் ஆகர்ஷிக்க காரணமாயிற்று. புத்தகம், நாடுகளை பிடித்தமை என்பன எல்லாம் இரண்டாம் விடயங்களே. 1940 களின் சிந்தனை வசப்பட்ட அந்த மக்களின் அதே சிந்தனையை 2012ல் நாம் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் பார்க்கிறோம்.
இது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த, அந்த மண்ணின் சுகங்களை அநுபவித்த, அந்த பொற்கால வாழ்க்கையின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு “மாயக்கண்ணாடி” தான் “யாழ் முஸ்லிம் ஒன்று கூடல் 2012” என்பதும் அவர்களிற்கு புரியாமலில்லை. உணர்வுகளும், ஆசைகளும் அவர்களை அதையும் தாண்டிய தற்காலிக இன்பங்களின் பக்கம் இழுத்துச் சென்றுள்ளன.
“கிங்கோங் தாரா சிங் குத்துச்சண்டை” போல, “அப்பலோ சர்கஸ்” போல, சென்பற்றிக்ஸ் “கார்னி வேல்” போல, “யாழ் முஸ்லிம் ஒன்று கூடலும்” அவர்கள் உள்ளத்தை விட்டு அகலாதவையே.

இந்த எல்லைகளையும் தாண்டி “யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்” எதை சாதித்துள்ளது?. அதன் அடைவுகள் தான் என்ன?. எந்த இலக்கு நோக்கி அது முஸ்லிம்களை அழைத்துச் செல்ல முயன்றுள்ளது? எனும் கேள்விகளிற்கு விடையாக வருவது பூச்சியமே.

தடல்புடலான விருந்துபசாரம், இரவு நேர ட்யூப் லைட்கள், போட்டி நிகழ்ச்சிகள், மதத்தலைவர்களிற்கும், படைத்தலைவர்களிற்கும் விருந்து வைப்பது போன்றன எம் புருவங்களை உயர்த்த வைக்கலாம், வெளியூர் முஸ்லிம்களை அதிசயிக்க வைக்கலாம். இவையெல்லாம் சாதிப்புகளல்ல. ஆனால் ஒரு பெரிய நிகழ்ச்சியை எந்த விதமான பிரச்சனைகளும் அல்லாத வகையில் அழகாக ஒழுங்குர நடாத்தி முடித்தமையையிட்டு இதன் ஏற்பாட்டாளர்களை பாராட்டலாம். அவ்வளவுதான்.
எமது பார்வையில் “இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களுடனும் கலாச்சாரத்துடனும் இஸ்லாத்தை சமனிலை படுத்தும் ஒரு நிகழ்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது”.  இது ஒரு நல்ல முன்மாதிரயல்ல. மாறாக யூத கிறிஸ்தவ கலாச்சாரங்களை ஒட்டிய செயல். 

நாம் ஒரு கோட்டையின் அடித்தளங்களை பற்றி பேசும் போது ஒரு கொட்டிலை போட்டு சமாளிக்கலாம் என எம் தலைவர்களும், தலைவர்களாக வர நினைப்பவர்களும் கூறும் போது, அதனை நம் சமூகம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் போது, வருங்காலங்களிலும் இதையும் விட சிறப்பாக செய்வோம் என சத்தியபிரமாணம் எடுக்கும் போது இந்த நிகழ்வினை நிராகரித்த, தடுக்க முற்பட்ட நாம் நிச்சயமாக தோற்று போய் விட்டோம். எம் எழுத்துக்கள் தோற்றுப்போய் விட்டன. 
எம் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே, தலைவர்களே, தலைவர்களாக வர நினைப்பவர்களே உங்களிடம் நாம் சொல்வது இதுதான். “உலக வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கைகளும் விளையாட்டுக்களும் நிறைந்தவையே. இவை உங்களை மறுமையின் சிந்தனைகளை விட்டும் பாராமுகமாக்கிவிடல் வேண்டாம். நிச்சயமாக நாம் ஒப்புக்கொண்ட மறுமை எம்மை வந்தடைந்தே தீரும். நம் மரணமும் கூட” வருங்காலங்களிலாவது நாம் நேர்வழி பெற்ற நடுநிலை சமுதாயமாக மாற முயற்சிப்போம்.
என்றென்றும் அன்புடன் -

1 comment:

  1. All the roads to hell are paved with good intentions.

    Nawa

    ReplyDelete