அன்பார்ந்த யாழ் குடா தமிழ் மக்களே. இது உங்களிற்கான பதிவு. இனவாதம், தமிழ்
குறுந்தேசியவாதம், சாதித்துவம், ஆயுத அதிகாரம் போன்ற பேய்களை விட்டு
விலகிய நிலையில் இதை கொஞ்சம் வாசியுங்கள்... தமிழ் மக்கள். நல்ல
கலாச்சாரங்களிற்கு சொந்தக்காரர்கள். நல்ல கல்விக்கும் சொந்தக்காரர்கள்.
சிறந்த முயற்சியாளர்கள். கடின உழைப்பாளிகள். இப்படி எவ்வளவோ சொல்லலாம்.
தடம் புரண்ட போராட்டம் இது எல்லாவற்றையுமே அள்ளி சென்றுவிட்டது. உங்கள்
போராட்டம் எம்மை அள்ளி சென்றது போல. அள்ளிச் சென்று புத்தள உப்பளங்களில்
துப்பியது போல..
ஒரு மொழி பேசும் இரு இனங்கள் நாம். ஆனால் நாம் முரண்பட்டு நிற்கிறோம். இந்த முரண்பாட்டு சூழலை உருவாக்கியது யார்? நீங்களும் நாங்களுமல்ல. மாறாக எம் தலைவர்கள். ஆரம்ப நாட்களில் உங்கள் தலைவர்கள். பிற்பட்ட நாட்களில் எங்கள் தலைவர்களும் கூட. தங்கள் சுய இலாப அரசியல் அடைதல்களிற்காக யாழ் குடாநாட்டின் தமிழ் முஸ்லிம் உறவுகள் பந்தாடப்பட்டுள்ளன.
இதை செய்தவர்கள் அரசியல் தலைவர்கள் என்பதனை விடவும் ஆயுதக் குழுக்களின் தலைமை என்பதே பொருந்தும். முஸ்லிம் பிரதேசங்களை சூழ உள்ள பிரதேச பொருப்பாளர்களின் தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து எந்தவிதமான ஆய்வுகளிற்கும் செல்லாமல் முடிவுகளை மட்டும் எடுத்ததால் வந்த விளைவு இது.
போராட்டம் பற்றி யோசித்த காலை பொழுதுகளில் சங்கிலியன் சிலையும், பொட்டு வைத்த தமிழச்சியுமே உங்கள் தலைவர்களின் கண்களில் தெரிந்தன. எம்மை மறந்த ஒரு போராட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். அதனால் தான் எம்மை நிராகரித்த ஒரு போராட்டத்திற்கும் சொந்தக்காரர்கள் ஆனீர்கள்.
எழுபதுகளின் பின்னைய வருடங்களில் இளவாளை என்றும், கொழும்புத்துறை என்றும், சித்தன்கேணி என்றும் அரசியல் வகுப்பெடுத்து “விடுதலை” எதற்காக என விளக்கிய சந்ததியார் முதல் கடைசி அரசியல் பொருப்பாளர் வரை முஸ்லிம்களிற்கு அதை விளக்க மறந்து விட்டனர்.
உங்கள் போராட்டம் ஆயுத ரீதியில் உத்வேகம் பெற்ற போது மட்டும் முஸ்லிம் பகுதிகளில் நுழைந்தீர்கள். வாகனங்களை கடத்த, மண் மீட்பு நிதி எடுக்க, கப்பம் அறவிட, ஆயுத பயிற்சிக்கு யு.பி. க்கு இளைஞர்களை அனுப்ப, யாழ் கோட்டைக்கான இரண்டாம் சப்ளை அணிகளை நிலை நிறுத்தும் முகாம்களை அமைக்கவென்று. இதனால் தான் நாம் உங்களை அந்நியமாக பார்க்க நேர்ந்தது. திடீரென வந்து இவ்வளவையும் செய்து விட்டு அதற்கு பெயர் “விடுதலை போராட்டம்” என்றால் “விலை என்ன” என்றே எம் மக்கள் கேட்டனர்.
படித்த தமிழர்களிற்கே ஆயுத போராட்டம் தொடர்பாக ஆயிரம் வகுப்பெடுத்த நீங்கள் படிக்காத வியாபாரிகளான எம்மிடம் எந்த போராட்ட கல்வியையும் வழங்காமல் வந்து “நீங்கள் இஸ்லாமிய தமிழர்” என்றால் யார் தான் ஏற்றுக் கொள்வார்கள் உங்கள் துருப்பிடித்த அழைப்பை.
நீங்கள் ஊட்டி வளர்த்த போராட்டமே எம்மை கபளீகரம் செய்தது. நீங்கள் சார்ந்து நின்ற விடுதலை அமைப்பே எம்மை அகதிகளாக்கியது. இப்போது அந்த அமைப்பு அழிந்து விட்டது. அதே சிந்தனைகளில், அவர்கள் உங்களிற்கு கற்றுத்தந்த கோணங்களில் எம்மை பார்ப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்.
உங்கள் மண்ணிற்காக போராடிய, அர்ப்பணம் செய்த நீங்கள் தான் இப்போது எமது மண்ணை ஆக்கிரமித்துள்ளீர்கள். யாழ்ப்பாண சோனக தெருவின் காணிகளை நீங்கள் உங்கள் ஐரோப்பிய பணத்திலும், இயக்க காலங்களில் உழைத்த பணத்திலும் வாங்கி தள்ளியுள்ளீர்கள். அகதியாக கல்யாண வயதில் குமர்பிள்ளைகளை வைத்திருந்த ஒவ்வொரு முஸ்லிமும் புத்தள முகாம்களில் கலங்கி நின்ற வேளை நீங்கள் காசை கொடுத்து காணிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கியுள்ளீர்கள். “இதுவும் ஒரு நில அபகரிப்பே”
உங்கள் சாணாக்கியன் சொல்லி தந்த பேதத்தையும், தண்டத்தையும் உங்கள் போராட்ட இயக்கங்கள் செய்தன. நீங்கள் இப்போது சாமத்தையும், தானத்தையும் செய்ய முற்படுகிறீர்கள். பாதைகள் எதுவானாலும் அதை அடையும் வழி ஒன்றென்ற வகையில் உங்கள் வழி வகைகள் வேறானாலும் செய்வது முஸ்லிம் பிரதேசங்களை தமிழ்மயப்படுத்துவதே.
யாழ் முஸ்லிம் வட்டாரம் என்பது எங்கள் மண். எம்முன்னோர்கள் வாழ்ந்த மண். இங்கு தான் நாம் உருண்டு புரண்டு விளையாடியது. இங்கே தான் நாம் காதலித்தது. இங்கே தான் திருமணமுடித்து குழந்தைகள் பெற்றது.
இப்போது அந்த மண்ணை வந்து பார்த்தால் “குங்குமம் பூசிய பூசணிக்காய்கள், வாலையாட்டும் நாய்கள், சாமிப்படங்கள், பஜனைகள் என எம் மண்ணே மாறி நிற்கிறது.
வன்னியிலும் யாழ் ஏ9 பாதையிலும் பன்சலைகள் முளைப்பதை பற்றி எத்தனை கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதப்படுகின்றன இன்று. உங்கள் கூட்டமைப்பு உலகம் முழுவதும் இதை ஒரு முக்கிய பிரச்சனையாக பரப்புரையாற்றுகிறதே, அப்படியானால் எங்கள் மண்ணை இந்து மண்ணாக மாற்றிய நிலையை காணும் போது நாம் எப்படி துடித்து போவோம்.
தமிழர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இன்றும் உண்டு. தமிழர்கள் நியாயங்களை ஏற்றுக்கொள்பவர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இன்றும் உண்டு. அன்பர்களே..! நாங்கள் நாதியற்றிருந்த வேளையில் உங்கள் மக்கள் எம் காணிகளை விலைக்கு வாங்கியுள்ளனர். இப்போது அதற்கு நியாயமும் கூறுகின்றனர்.
“வன்னியில் பசியில் துடிக்கும் நான்கு குழந்தைகளுடன் நின்ற ஒரு குடும்பஸ்தரிடம் இரண்டு இராத்தல் பாண்களை கொடுத்து விட்டு அவர் கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தை வாங்கி சென்றிருக்கிறார் ஒருவர்” இது ஒரு செய்தியாக படித்த விடயம். அதையொத்த வேலையைதான் நீங்களும் செய்துள்ளீர்கள்.
கொட்டடி, நாவாந்துறை, கற்குளம், ஓட்டுமடம், கண்ணபுரம் போன்ற அயல் பிரதேச தமிழர்கள் வாங்கிய நிலை மாறி இன்று மானிப்பாய், பணடத்தரிப்பு, அரியாலை எனக்கு எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள். பார்க்கிறார்கள். வாங்குகிறார்கள். புரியவில்லை எமக்கு. என்னதான் நடக்கிறது. இதன் பின்னால் யார் யார் இருக்கிறார்கள். எந்த மிஷனரிகள் இதை செய்கின்றன என்று.
ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறோம். இது எங்கள் மண். யாழ் முஸ்லிம்களின் மண். வாழ்ந்த மண். வீளவும் தயாராகவுள்ள மண். முஸ்லிம்கள் உலக இனங்களில் இருந்தும் மதங்களில் இருந்தும் வித்தியாசமானவர்கள். தங்கள் மார்க்கத்திற்காக மரணத்தையும் நேசிப்பவர்கள்.
இதே யாழ் மண்ணில் தான் எங்கள் பள்ளிவாயல்கள்
நிமிர்ந்து நிற்கின்றன. அதற்கான வாழ்தல் தவிர்க்க முடியாதது. இது எமது மீள் குடியேற்றத்தின் ஆரம்பமே. நளைய சமூக முரண்பாடுகள் உருவாகாமல் இருக்க, கலாச்சார முரண்பாடுகள் உருவாகாமல் இருக்க, இன முரண்பாடுகள் உருவாகாமல் இருக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். நீங்களும் அப்படித்தான் விரும்புவீர்கள் என நினைக்கிறோம்.
வாழ்தல் என்பதன் அர்த்தம் அமைதி, சந்தோசம். இது நம் இரு இனத்தினரிற்கும் தேவையானது. அதற்காகத் தான் நாம் எவ்வளவோ செய்கிறறோம். அன்பின் தமிழர்களே. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறோம்.
முஸ்லிம்களின் நிலங்களை “விலைக்கு வாங்குதல்” என்ற போர்வையைில் அபகரிப்பதை நிறுத்துங்கள். வாங்கியவர்கள் அவற்றை முஸ்லிம்களிற்கு மீண்டும் விற்று விடுங்கள். குடாநாட்டின் நிலப்பரப்பில் எத்தனை விகித நிலம் முஸ்லிம்களிற்கு இருக்கிறது. இதை அபகரிப்பதனால் எதை சாதிக்கப் போகிறது மறவர் இனம்?
பேரினவாதம் செய்தவற்றை நீங்கள் எங்கள் மீதும் செய்வதென்றால் உங்களிற்கும் அவர்களிற்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் எதற்காக போராடினீர்கள்? உங்கள் போராட்டத்தில் நியாயம் இருப்பதனால் தான் இன்று வரை உங்களால் அரசியல் ரீதியாகவாவது உங்கள் நியாயங்களிற்காக அணிதிரள முடிகிறது. அந்த நியாயங்கயே உங்களை வழிநடாத்துகின்றது. அந்த நியாயங்களே இன்று உங்களை உலகம் உற்று பார்க்க வழி செய்துள்ளது.
அதே நியாயங்களில் வழி நின்றே இதை ஒரு வேண்டுகோளாக உங்களின் முன் வைக்கின்றோம் நாம். இது எங்கள் மண். முஸ்லிம்களிற்கு சொந்தமான மண். இதை எங்களிற்கு விட்டு விடுங்கள். வாங்கியதை எங்களிற்கே திருப்பி தந்து விடுங்கள். முஸ்லிம் மண்ணில் காணிவாங்கியர்வர்களை இது விடயத்தில் அழுத்தம் கொடுங்கள்.
இதில் நீங்கள் அநியாயம் செய்வீர்களானால் நாளை இதே நியாயங்கள் எங்களை அணி திரட்டும். இதே நியாயங்கள் எங்களை வழிநடத்தும். இதே நியாயங்கள் எங்களிற்கும் தலைமை வகிக்கும். இதே நியாயங்கள் எங்ளையும் உற்று பார்க்க வழி வகுக்கும்.
நாம் இதனை உங்ளிடம் நேரடியாக கேட்கிறோம். நேர்மையாகவே கேட்கிறோம். பலஸ்தீனர்கள் அன்று கேட்டது போல....“எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி தந்து விடுங்கள். ஏனென்றால் இது எங்கள் நிலம்”
Thx...
ReplyDeletenice published