Thursday, February 2, 2012

யாழ் முஸ்லிம் மண்ணை காப்பாற்றுங்கள் - முஸ்லிம் புலம்பெயர் உறவுகளிற்கு ஒரு வேண்டுதல்!

 ABU Maslama
பலஸ்தீனில் அன்று யூதர்களிற்கு காணிகளையும், விவசாய நிலங்களையும் விற்பதனால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்த உலமாக்கல் லெபனானின் பெய்ரூட்டில் ஒன்று கூடி ஒரு பத்வா வெளியிட்டனர். “இன்றிலிருந்து பலஸ்தீன மண்ணை விற்பது ஹராம்” என்பதே அந்த பத்வா. தமிழர்கள் சாதிக்காக போராடினார்கள். விடுதலைக்காக போராடினார்கள். இரண்டுமே கிடைத்தபாடில்லை. இயக்கங்கள் விடுதலைக்காக போராடின. தலைமைத்துவத்திற்காக போராடின. இரண்டுமே கிடைக்கவில்லை. இப்போது தங்களை தக்க வைத்துகொள்வதற்காக போராட வேண்டிய நிலமை. போராடியதன் விளைவு படலைக்குள் இராணுவம் வந்து நிற்கும் நிலை.


இனியொரு விடுதலை போராட்டம் நடக்குமா என்பதில் பலரிற்கும் சந்தேகமே!. இப்போது எல்லோருமே “வாழ்தல்” எனும் வட்டத்திற்குள் வந்து விட்டார்கள். தமிழர்கள் மட்டுமல்ல. அவர்களது செல்ல இயக்கமான பாசிஸ புலிகளால் தாய் மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களும் கூடத்தான். அவர்களும் வாழ்தல் எனும் வட்டத்திற்குள் வந்து விட்டார்கள் அநாதையான 20 வருட வாழ்க்கைக்கு பின்னர்.

வாழ்வதற்காக தாய் மண்ணிற்கு சந்தோஷ கற்பனைகளுடன் வந்தால், நிலமில்லை. வீடில்லை. வீட்டில் நிலையில்லை. மொத்தத்தில் எல்லாமே இல்லை. இது தான் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்றால் மிகையில்லை.

குடும்பத்துடன் வந்து சோனக தெருவின் நடுச்சந்தியில் என்ன செய்வது? எங்கு செல்வது? என்று தெரியாது விக்கித்து, திகைத்து நிற்கிறது முஸ்லிம் குடும்பங்கள். அவர்களை அந்த முஸ்லிம்கள் காலம் காலமாய் வாழ்ந்த வீட்டில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் தமிழ் சிறுவர்கள். மாடியில் நின்று சிரிக்கிறார்கள் கத்தோலிக்க சிறுமிகள். சில பெரிசுகளும் சிரிக்கின்றன.

தான் ஆசையாய், ஆடம்பரமாய், அகங்காரமாய் வாழ்ந்த தன் வீட்டின் குந்தில் சற்று நேரம் மன ஆறுதலிற்காக உட்கார்ந்திருந்த ஒரு முஸ்லிம் முதியவரிற்கு கதவின் வழியாய் நீரை ஊற்றி எழும்ப வைத்த தமிழர் அந்த வீட்டின் சொந்தக்காரர். கேட்டதிற்கு ஆடு அல்லது நாய் படுத்திருக்கிறது என ஆணவமாக பதில் சொன்னார் அந்நத வீட்டின் சொந்தக்கார தமிழர்.

முஸ்லிம்களின் வீதிகளில் தாரை தப்பட்டையடித்து பிணம் செல்கிறது. அது அவர்கள் உரிமையென்றால், அதான் எனும் பாங்கு சொல்லும் போதும் அந்த தப்பட்டைகளும் பலமாகவே அடிக்கப்படுகின்றன.

அது ஒரு பள்ளிவாசல். ஒரு காலத்தில் துடியான இளைஞர் கும்பல் காலை முதல் மாலை வரை அதன் வாயிலிக்கருகில் இருந்த வண்ணமிருப்பர். இப்போது அவர்கள் இல்லை. ஆனால் பள்ளிவாயல் மட்டும் எஞ்சி நிற்கிறது. தொழுகையும் நடக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் மாற்று மதத்தான். எம்.ஜீ.ஆரின் பாடலை பலமாகவே போடுகிறான். டி.எம். சொளந்தரராஜன் குரலில் பாடல் வரிகள் துள்ளி வருகின்றன. இந்த சத்தத்தில் மௌலவியின் ஓதல் ஓரங்கட்டப்படுகிறது. முன்பொருநாள் அதே வீட்டில் ஓதும் குர்ஆன் ஓலி மௌலவியின் ஓசையுடன் ஒத்து போகும்.

முஸ்லிம்களின் வீதிகளில் தேர் போகிறது. வடம் இழுக்கிறார்கள். அது ஒஸ்மானியா கல்லுரியின் முன்பும் நிற்கிறது. புது பள்ளிவாயல் முன்பும் நிற்கிறது. பின்பு செல்கிறது. இந்து இன்று சோனகதெருவின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? எமது நிலங்களை நாம் அந்நியவர்களிற்கு விற்றமையாகும். நாலை சேர்ச்சும் வரலாம். அவர்களின் கர்த்தரின் பவனியும் வரலாம். மாதா புதுப்பள்ளிவாயலால் சுற்றலாம். எல்லாம் நடக்கும். அதாவது கடந்த 21 வருடககங்காளக முஸ்லிம்கள் இல்லாத வீதிகளில் இவையெல்லாம் சாத்தியமாயின. சாத்தியப்படுத்தப்பட்டன.


இப்போது நம் சகோதரர்கள் மீண்டும் நம் மண்ணில் வாழ வந்துள்ளனர். பலர் வாழ்கின்றனர். இன்று தலைமைத்துவத்தை கொடுக்கும் சம்மேளனமாயினும் சரி, எனைய அமைப்புக்ளாயினும் சரி இனிவரும் காலங்களில் நம் காணிகள் விற்கப்படாமல் தடுக்கப்படல் வேண்டும். இதற்கான ஒரு பொறிமுறை நமக்கு அவசியம்.

முஸ்லிம் காணிகள் கைமாறுவதனை தடுக்கக் கூடிய வேலைத்திட்டங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவை கூட்டுத்தலைமையின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படல் வேண்டும். எமது முஸ்லிம்கள் பலர் மேற்கைரோப்பிய நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களை இது விடயத்தில் ஆர்வமூட்ட வேண்டும்.

வீடுகளை வாங்க ஆவல் குறைவென்றால், சில வீடுகளை வாங்கி இடித்து விட்டு மொடல் வீடுகளை உருவாக்கி விற்பனை செய்வதனுடாக கிடைக்கும் இலாபத்தினையும் வறிய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு பயன் படுத்தலாம்.

இது விடயத்தில் எமது புலம்பெயர் உறவுகளை ஆர்வப்படுத்தல் வேண்டும். நம்மில் வசதி படைத்தவர்கள் பல காணிகளை வாங்க முடியும்.

எம் கண்முன்னே எமது மண் விழுங்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. சட்டரீதியான அனைத்து அழுத்தங்களையும் இதில் நாம் கையாள வேண்டும். காணிகளை நம்மவர்கள் வாங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

நாம் சிந்திப்போம். நாம் எதை செய்தாலும் ஒரு யாழ்ப்பாண முஸ்லிமிற்கு நன்மை பயக்குமா என்ற சிந்தனையோடு செயற்படுவோம்.

பலஸ்தீனில் அன்று யூதர்களிற்கு காணிகளையும், விவசாய நிலங்களையும் விற்பதனால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்த உலமாக்கல் லெபனானின் பெய்ரூட்டில் ஒன்று கூடி ஒரு பத்வா வெளியிட்டனர். “இன்றிலிருந்து பலஸ்தீன மண்ணை விற்பது ஹராம்” என்பதே அந்த பத்வா. அந்த பத்வா நமக்கும் பொருத்தமானதே. -

No comments:

Post a Comment