Monday, February 13, 2012

புலம்பெயர் தேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களே ! உங்களுடன் ஒரு நிமிடம் சோனக தெரு பேசுகிறது..

யாழ் முஸ்லிம் பேஸ்: நான் சோனக தெருவின் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். மீலாத் விழாவின் கலகலப்புக்கள் அற்ற சோனக தெரு. அங்காங்கே சில குந்துகளில் ஜங்கில் புக் மௌக்லியை நினைவு படுத்தும் கோலங்களில் சிறுவர்கள். அவர்களைப் போலவே இன்னும் சில குந்துகளில் பெரிசுகள். ஒரு சில நாய்கள் (இவை சோனக தெருவில் தமிழர்கள் வாங்கிய வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். அதாவது அந்த மண்ணிற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை அவற்றிற்கும் உண்டு) அவர்கள் பேசும் அரசியலை ஆவலோடு அன்னாந்து பார்க்கின்றன..
இடைக்கிடை ஓடித்திரியும் டாட்டா ரக படி வேன்கள். தேத்தன்னிக்கடை. சிகரட். எதரை வாழைப்பழ தோல், அலறும் சக்தி எப் எம் வானொலியின் அறிவிப்பாளர். இது தான் சோனக தெரு. அமைதியாக அடுத்த வீட்டை ஒரு அந்நிய மதத்தவனிற்கு விற்க ஆயத்தமாக நிற்கும் சோனக தெரு.



புலிகளின் பாடல் வரியொன்று ஞாபகம் வருகிறது. “காதலித்து கை பிடித்து, கட்டிலிலே சுகம், பொல்லுன்றி சாவதுதான் வாழ்க்கையா? போகும் உயிர் பொன்னாட்டின் விடுதலைக்காய் போகுமெனின் கோடி இன்பம் தேடி வரும்” என அந்த வரிகள் செல்கின்றன. அதில் இன்னொரு வரியும் உண்டு. “யூகே போக யூ.டீ.ஏ. ஏறாமல் ஏ.கே.யை தூக்கியவர் நாங்கள்” என்பது அது.


இங்கே நம் யாழ்ப்பாண முஸ்லிம்களை யூ.கே. போகாதீர்கள் என நாம் சொல்லவில்லை. யூ.கே.யிற்கு ஸ்விஸ் எயாரில் போங்கள். சிங்கபூர் எயாரில் போங்கள். குறைந்த கட்டணத்தில் கத்தாயில் போங்கள். எப்படியாவது போங்கள். எப்படியும் போங்கள்.
எம் புலம்பெயர் தேசத்து சகோதரர்களே. .. அங்கே நீங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம். உங்கள் பொன்னான வாழ்க்கையின் பெறுமதியான மணித்தியாலங்களை விற்றே பவுன்ஸ்களை கொள்வனவு செய்கிறீர்கள்.


யாழ்ப்பாண சோனக தெருவின் மண்மீட்பு என்பது இன்றைய நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இந்த நிலங்களை அல்லாஹ்வின் இறையில்லங்கள் உயிர்ப்பிக்கப்படும் பூமியாக மாற்றிக் காட்டுவது உங்கள் கடமை. இதை உங்களை தவிர வேறு எவராலும் இன்றைய நிலையில் நிறைவேற்ற முடியாது.


இறைவன் சோதனைகளை தனி மனிதனிற்கும் அனுப்புவான். சமூகங்களிற்கும் அனுப்புவான். உங்களிற்கு வளமான வாழ்விருக்கிறது. அழகான குழந்தைகள் இருக்கின்றன. நிறைவான செல்வமிருக்கிறது. இப்போது நீங்கள் பிறந்து வாழ்ந்த இடத்தை, அந்த சோனக தெருவை உயிர்பிக்கும் சிற்பிகளாக நீங்கள் மாறவேண்டிய கால கட்டம் இது. நீங்கள் செய்வதெல்லாம் ஒன்றைத்தான். யாழ்ப்பாண சோனக தெருவில் உள்ள காணிகளை, நிலங்களை, வீடுகளை கூட்டாகவோ, தனியாகவோ கொள்வனவு செய்யுங்கள். ஒவ்வோரு மேற்குலகில் வாழும் யாழ்பாண சகோதரனும், சகோதரியும் இந்த வேலையை செய்தல் வேண்டும்.


இஸ்ரேல் எனும் பலம் பொருந்திய தேசத்தின் அடிப்படையும் இவ்வாறே ஆரம்பமானது. நாம் சொல்லும் கோஷத்தையே அன்றைய புலம்பெயர் பலஸ்தீன உறவுகளிடம், பலஸ்தீனத்தவர்கள் கோரிக்கையாக வேண்டி நின்றனர். அவர்கள் அதனை செய்யவில்லை. 80 வீதமான பலஸ்தீன் இதனாலேயே அவர்களை விட்டுப்பறிபோனது.


அன்பின் சகோதர, சகோதரிகளே.. இந்த விடயத்தை சற்று ஆழமாக சிந்தியுங்கள். உங்களிற்கு பல பிரச்சனைகள் உண்டு. புரியாமலில்லை. அவற்றின் மத்தியில் இதற்கும் ஒரு முன்னுரிமை கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியாவிட்டால் உங்கள் உறவுகளுடன் இணைந்தாவது சோனக தெருவில் விற்பனைக்கு தயாராக உள்ள காணிகளை வாங்க முற்படுங்கள்.


எம் நிலங்கள் மீண்டும் எம்மவர் கைகளிற்கே செல்லல் வேண்டும். எமது மஸ்ஜித்களின் உயிர்ப்பு இதிலேயே தங்கியுள்ளது. சகோதரர்களே. இதை உங்கள் ஏனைய சகோதரர்களிற்கும் எத்தி வையுங்கள். இது எமது கோரிக்கை மட்டுமல்ல யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம்களின் மன்றாட்டமிக்க பதிவுகளும் கூட. புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ள முற்படுங்கள். பிறரிற்கும் புரிய வையுங்கள்.


முதுமையின் கடைசி விளிம்பில் நாம் நடந்து வந்த பாதையினை பல முறை நாம் எண்ணி பார்க்கத்தான் போகிறோம். அப்போது நாம் நம் சமூகத்திற்கு என்ன செய்தோம் எனும் கேள்விகள் நாம் நல்ல மனிதர்களாக இருந்தால், மனசாட்சியுள்ள மனிதர்களாக இருந்தால் நம் இதயத்தை தட்டி கேட்கத்தான் போகின்றன. அப்போது வரும் ஒரு இனம் புரியாத வேதனையிருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.


எம்மை விட்டு பிரிந்து பல ஆயிரம் மைல்களிற்கு அப்பால் பனியின் குளிரில் கண்ணாடிகள் அணிந்து, மேற்கின் நாகரீகத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு ஒரு பொய் வாழ்க்கை வாழும் உங்களிற்கும் எமக்கும் பிடிப்பது அதே விடயங்கள் தான்.நாம் லப்டொப்பில் உறவாடலாம், பேஸ்புக்கில் தொங்கலாம், ஸ்கைப்பில் ஒவ்வொரு நாளும் நீந்தலாம். ஏதோ ஒரு நமக்கே புரியாத ஸ்டைலில் ஆங்கிலத்தை பேசலாம்.ஆனால் நம்மையெல்லாம் ஒன்றினைக்கும் சில விடயங்களும் உள்ளன. அவை.....தேங்காய் சோறு, பனங்காய்பணியான், கோமுகாக்காவின் சர்பத், பதுருசமானின் விளாங்காய் பால், கச்சுக்காக்காவின் ஆட்டிறைச்சி, அம்பது ரூபா பாருக்கின் ரொட்டி, ஓரியண்டின் கொத்து ரொட்டி, ..... இப்படி எவ்வளவோ. அந்ந நிணைவுகளை தந்த சோனக தெரு உங்கள் காலடியில் யாசகம் கேட்கிறது. “என்னை காப்பாற்றுங்கள்” காப்பாற்றுவீர்களா உறவுகளே?....... இல்லை


அப்பிள் போனில் அரசியல் பேசி, பேஸ்புக்கிள் டோட்டர் இன் லோவை செலக்ட் பண்ணி, 3ம் கத்தத்திற்கு தம் புரியாணி போட்டு, பாவங்களை கழுவ உம்ரா சென்று, வரும் வழியில் துபாயில் தங்கம் வாங்கி, கொஞ்சம் கடத்தி, சாகிர் நாயக்கின் சீ.டி.யை கொடுத்து பெரிய தஃவா செய்ததாக உள்ளத்தே பெருமைப்பட்டு, கல்யாண வீட்டிற்கு மண்ணடியில் சாரிவாங்கி, துபாயில் ஜில்பாப் வாங்கி, பெருநாள் ஒன்று கூடல் எனும் கலப்பு கெட்டு கெதர் நடாத்தி, ஆடிப்பாடி, களவில் பொட்டில் உடைத்து, இன்னும் என்னன்னமோவெல்லாம் செய்து............... டயபிடீஸ் வந்து, கொலஸ்ரோல் வந்து, அப்பலோவில் பைபாஸ் செய்து, செய்த பைபாஸை இன்டர் நெட்டில் ஊர்முழுக்க சொல்லி அதில் இன்பங்கண்டு இறுதியில் இறந்து போய் ஏதோவொரு கிறிஸ்தவ சவக்காலையில் வாடகைக்கு எடுத்த முஸ்லிம் நிலத்தில் அடக்கம் செய்யும் வாழ்வுதான் பெரிதென்றால் செய்யுங்கள். கீப் ஓன் கோ எ ஹெட்.


நாளை மரண அறிவித்தல் கூட சொல்வார்கள் இலங்கை வானொலியில் “யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ------ அன்னார் பாரிஸில் மரணமானார். அன்னார் பிரான்ஸில் வசிக்கும் ----------- இன்னார்களின் மாமாவும், லண்டனில் வசிக்கும் ---------- இன்னார்களின் சாச்சாவும், ஸ்விஸில் வசிக்கும் ----------- இன்னாரின் அப்பாவும் ஆவார். அன்னாரின் கத்தமுல் குரான் டொரன்டோவில் நடைபெறும்”
இது தானே நம் வாழ்வின் அடைதல்கள். இலக்குகள். இலட்சியங்கள். மாஷாஅல்லாஹ். வெரிகுட்.


“தெரியாத சில பேர்க்கு இது நாகரீகம், புரியாத பல பேர்க்கு புது நாகரீகம். முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?. முன்னோர்கள் சொன்னார்கள். அது நாகரீகம். முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்.

No comments:

Post a Comment