முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணம் சோனகதெருவில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளிவாசல் தற்போது
மீளமைக்கப்பட்டு வருகின்றது. 1890களில் நல்லூரில் வாழ்ந்த இறுதி முஸ்லிம்
குடும்பங்கள் சோனகதெருவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதைப் பார்த்து அங்கு
குடியேற விரும்பி குளத்தடி பிரதேசத்திலிருந்த காணிகளை வாங்கி அங்கு
குடிசைகளை அமைத்துக் குடியேறினர். தமது தொழுகைக்காக நீண்ட தூரம்
நடக்கவேண்டியிருந்ததால் தமது குடியிருப்புகளுக்கு அண்மையிலேயே பள்ளிவாசல்
ஒன்றை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது தான் இந்த
சின்னப்பள்ளிவாசலாகும்.
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் இப்பள்ளிவாசலும்
அதனுடன் சேர்ந்த கட்டிடங்களும் அழிவடைந்து போயிருந்தது. 2009இல்
சூழ்நிலைகள் சாதகமாக அமைந்ததால் இப்பிரதேச முஸ்லிம்கள் மீளக்குடியேற
ஆரம்பித்துள்ளனர். அந்த அடிப்படையில் தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட
குடும்பங்கள் இப்பிரதேசத்தில் குடியேறியுள்ளனர்.
இவர்கள் தமது தொழுகைகளை நிறைவேற்ற வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால்
இப்பள்ளியை கட்டித்தரும்படி அப்பிரதேச மக்கள் கோரிக்கைகளை
முன்வைத்திருந்தனர். இதன் பிரகாரம் நீர்கொழும்பு, கொழும்பு மற்றும்
புத்தளம் போன்ற பிரதேசங்களில் தற்போது வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
முஸ்லிம்கள் ஒன்று கூடி 'சின்னப்பள்ளிவாசல் மீள்நிர்மானக் குழு' என்று ஒரு
அமைப்பைத் தோற்றுவித்து அதனூடாக அக்கட்டிடத்தை மீளமைத்து வருகின்றனர்.
இதன் ஒருகட்டமாக தற்போது பள்ளிவாசலுக்குச் சொந்தமான அறைகளும்
மலசலகூடங்களும் மீளமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 27 அன்று ஆரம்பிக்கப்பட்ட
மீளமைப்பு பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பள்ளிவாசல்
கட்டுப்படுவதால் உற்சாகமடைந்த இரண்டு குடும்பங்கள் தற்போது அப்பகுதியில்
மீளக்குடியேறியுள்ளனர். பள்ளிவாசல் முற்றாகக் கட்டப்பட்டதன் பின்னர் இறைவன்
உதவியால் இன்னும் பல குடும்பங்கள் அப்பகுதியில் குடியேறும் என்ற
நம்பிக்கையில் மஹல்லாவாசிகள் உள்ளனர்.
இப்பணியை மேற்கொள்ள ஏராளமான நிதி தேவைப்பட்டதால் மீள் கட்டுமானக் குழு
யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே நன்கொடைகளைத் திரட்டியது. ஏற்கனவே திரட்டப்பட்ட
நிதிக்கமைய அறைகளும் மலசல கூடமும் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்
கட்டிட பணியை ஆரம்பிக்க பெருமளவு நிதி தேவைப்படுவதால் அந்த நிதி
கிடைத்தவுடன் பள்ளிவாசல் கட்டிட பணிகள் ஆரம்பிக்கப்படுமென மீள்கட்டுமானக்
குழு தெரிவித்துள்ளது.
இப்பள்ளிவாசல் கட்டுமாணப்பணி தனியே ஒரு மீளமைப்பு பணியாக அல்லாமல்
மீள்குடியேற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. என அக்குழு
தெரிவித்துள்ளது. பள்ளிவாசல் அறைகளில் மக்களை குடியேற்றுவதன் ஊடாக
குறிப்பிட்ட பள்ளிவாசலில் தொழுகை போன்ற செயற்பாடுகளை மீண்டும்
ஆரம்பிக்கலாம் என்பதும் அதனூடாக கைவிடப்பட்டுள்ள இப்பிரதேசத்துக்கு
புத்துயிர் அளிக்கலாம் என்பதும் குழுவின் நம்பிக்கையாகவுள்ளது. பள்ளிவாசல்
கட்டுமாணப் பணிக்கு நன்கொடைகளை வழங்கிய அன்புள்ளங்களுக்கு தமது
நன்றிகளையும் குழு தெரிவித்துக் கொள்கின்றது.
No comments:
Post a Comment