Sunday, January 1, 2012

மீளக்குடியேறுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தடை: அமைச்சர் ரிசாத்

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வரும் வடமாகாண முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.வடக்கு முஸ்லிம்கள் மீளக்குடியேற வேண்டுமென பேச்சளவில் கூறிவரும் கூட்டமைப்பு எம். பிக்களின் செயற்பாடுகள் அதற்கு முரணாக அமைந்துள்ளதாகவும் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல உள்ளதாகவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.


தமிழ்ச் சகோதரர்களுடன் அந்நியோன்யமாக வாழவே நாம் விரும்புகின்றோம். அவர்களின் ஓர் அங்குல நிலத்தையேனும் நாம் உரிமை கொண்டாடவில்லை. எனினும் எமக்குச் சொந்தமான காணிகளில் குடியேறியுள்ள மக்களை எமக்கெதிராகத் திருப்பி இனவாதத்துக்கு தூபமிடுவதாக அவர் தெரிவித்தார்.


மன்னார் விடத்தல்தீவில் சன்னார் கிராமத்தில் முஸ்லிம் களுக்குச் சொந்தமான காணி களில் அந்த மாவட்டத்தைச் சாராத மக்கள் குடியேறியுள்ளனர். அந்தப் பிரதேசங் கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சன்னாரிலும் ஈச்சிள வக்கையிலும் வெளி மாவட்ட மக்கள் வந்து குடியேறியுள்ளனர்.

புலிகளால் முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்படுவதற்கு முன்னர் இந்தக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்தனர். மன்னார் அரசாங்க அதிபராக விருந்த ஜெயநாதனின் கையொப்பத்துடன் 1978 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வருடாந்த உத்தரவு பத்திரத்தின் கீழ் சன்னார் பண்ணையில் உப உணவு பயிர்ச் செய்கைக்கான காணி உத்தரவுப்பத்திரங்கள் 200 முஸ்லிம்களுக்கும் 100 தமிழர்களுக்கும் வழங்கப்பட்டன. 1977 மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடத்தப்பட்ட காணிக் கச்சேரியின் பெயர் விபரங்கள் பள்ளமடுவிலுள்ள அரசாங்க நில அளவை திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டதாக காணி அதிகாரி உரியவர்களுக்கு அறிவித்திருந்தார்.

1990 ம் ஆண்டு முஸ்லிம்கள் மன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இந்தக் காணிகளில் புலிகளின் தேவைக் கேற்ப வெளி மாவட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் எந்தவிதமான அனுமதியுமின்றி இவர்கள் இங்கு வாழ்ந்த போதும் மனச் சாட்சிக்கு விரோதமின்றி அவற்றின் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு வழங்கி அவர்களையும் வாழ உதவுமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம். எனினும் இந்த வரலாறு தெரியாத கூட்டமைப்பு எம். பிக்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் இனவாதக் கருதுக்களை கிளப்பி இரு சமூகங்களையும் மோதவிடப்பார்க்கின்றனர்.

தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மறைப்பதற்காக கூட்டமைப்பினர் வீண் புரளிகளைக் கிளப்பி விடுகின்றனர். அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழர்களுக்கு எதிராகத் தொழிற்படுகின்றார். வேலை வாய்ப்பில் அவர்களைப் புறக்கணிக்கின்றார். எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். இவைகள் எல்லாம் அப்பட்டமான பொய். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்திலும் வேறிடங்களிலும் வாழ்ந்து வந்த இந்த மக்கள் படித்துவிட்டு தொழிலின்றி கூலி வேலைகளில் ஈடுபட்டு வருவது பற்றி கூட்டமைப்பு எம். பிக்களுக்கு எந்த விதமான கவலையுமில்லை. என்னைப் பற்றி காழ்ப்புணர்வுடன் அவதூறாகப் பேசுவதையே இவர்கள் தமது அரசியலாகக் கொண்டுள்ளனர். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அநியாயம் இழைக்கவில்லை.

அநீதியாகச் செயற்படவுமில்லை. தமிழ் மக்கள் என்னுடன் நல்லுறவையே கொண்டுள்ளனர். அவர்களின் தேவைகளை நான் முடிந்த வரையில் நிறைவேற்றுகின்றேன். தமிழர்களின் ஓர் அங்குலக் காணியையேனும் நாம் அபகரிக்கவில்லை. வேலை வாய்ப்பில் நாம் அநீதி இழைக்கவில்லை. இந்த விடயங்கள் தொடர்பாக நான் கூட்டமைப்பு எம். பிக்களுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார். அரசியலுக்காக அவர்கள் எதையும் செய்யக் கூடாது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்த காலம் மலையேறிவிட்டது. ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

இனப்பிரச்சினைத் தீர்வில் அவர்கள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்ளாவிட்டால் வரலாறு அவர்களைத் திட்டும். புலிகளின் பாணியில் தொடர்ந்தும் செயற்படுவது வடக்கு – கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை மழுங்கடிக்கவே செய்யும். யதார்த்த பூர்வமான, நடைமுறைக்குச் சாத்தியமான கோரிக்கைகள் மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான நகல் திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வரட்டுச் சித்தாந்தங்களை விட்டு விட்டு தெரிவுக்குழுவில் இணைந்து உருப்படியான தீர்வொன்றைக் காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்வதே காலத்தின் தேவை என்றார்.
நன்றி: தினகரன்

No comments:

Post a Comment