Monday, January 30, 2012

யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் - ஐயங்களுக்கு தெளிவு

அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி)
யாழ்ப்பாணம் முஸ்லிம் ஒன்றுகூடல் இம்முறை 2012 பெப்ரவரி 4,5,6,7ம் திகதிகளில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தை மையப்படுத்தி யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வையொட்டி பல்வேறு விமர்சனங்களும் கருத்தாடல்களும் பரவலாக எம்மவர் மத்தியில் உலா வருகின்றது, ஒரு சிலர் இதனை எம்மவர்கள் வருடா வருடம் கொண்டாடும் “கொண்டாட்டத்துடன்” ஒப்பீடு செய்கின்றார்கள், இன்னும் சிலர் “வெள்ளைக்கடற்கரை கொடியேற்றம்” என அடையளம் செய்கின்றார்கள்,

இன்னொரு புறத்தில் இது வீண் விரயம் என சொல்லப்படுகின்றது, இப்படியாக இந்நிகழ்வை பலரும் பல்வேறு கோணங்களில் நோக்குகின்றார்கள், ஆனால் இதன் ஏற்பாட்டாளர்களிடையே இந்நிகழ்வு குறித்து முற்றிலும் மாறுபட்ட கருத்தே நிலவுகின்றது. அதனை இங்கே அடையாளப்படுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.


1990 வெளியேற்றம் புலிகளின் திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்கின்றது, அதே போன்று இன்றுவரை தனித் தமிழ்த் தேசியவாத எண்ணக்கருவில் தீவிரம் கொண்ட பலரது நிலைப்பாடும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்பதாகும்.


இதற்கு சான்றாக கடந்த ஜனவரி 06ம் நாள் பீ.பீ.ஸீ தமிழோசையில் வெளியான நிர்மலா ராஜசிங்கம் அவர்களுடைய “தமிழர்கள் முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லவேண்டும்” என்ற அறிக்கை மீதான செவ்வியும் அதனைத்தொடர்ந்த கலந்துரையாடல்களும் முஸ்லிம்களின் மீது இன்னமும் காழ்ப்புணர்வு கொண்டுள்ள தமிழ்த் தீவிரவாதத்தை உணர்த்தி நிற்கின்றன.


மறுபக்கத்தில் அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை இன்னும் ஓரிருவருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது, அதே போன்று யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளவும் குடியேற வேண்டும் என்பதில் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள பல தமிழ் அரசியல் சமூகத் தலைமைகளும் இப்போது அவர்களது ஆதரவுக் கரங்களை முஸ்லிம்களை நோக்கி நீட்டியுள்ளனர், தேசிய சர்வதேசிய மட்டத்தில் யுத்த முடிவைத் தொடர்ந்த மீள்குடியேற்றம், யுத்தப் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி என்பன சாதகாமாக நோக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான சாதகமான சூழல் முடிவுக்கு வருவதற்கு முன்னமே யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் கணிசமான பகுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எமது அபிப்பராயமாகும்.

யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் இருவகையான பிரிவினரை நாம் காணுகின்றோம், ஒன்று மீளக்குடியேற்றத்தக்க யாழ்ப்பாண சமூகம் (அகச்சமூகம்) அடுத்து மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைக்கும் வெளிச்சமூகம் (புறச்சமூகம்). தற்போது யாழ்ப்பாண முஸ்லிம் மீள்குடியேற்றத்தின் அகச்சமூகத்தை எடுத்துக்கொண்டால் அங்கே; எதிர்மறையான சிந்தனைகள், சமூகப் போட்டாபோட்டிகள், சுயநல அரசியல் இலக்குகள், அறியாமை, சுய விருப்புகள் கொண்டு மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட அமைப்பில் மக்களுக்கு காட்டப்படுகின்றன.


எனவே மீளக்குடியேற விரும்பும் ஒருவன் எந்த நம்பிக்கையுடன் மீளவும் குடியேறுவான், அத்தோடு கடந்த 20 வருடங்களாக யாழ்ப்பாண முஸ்லிம்களை வங்குரோத்துக்காரர்களைப் போல நடாத்தும் சமூகத்தலைமைகள் அவர்களுக்கு ஏதாவது கொடுத்தால்தான் வருவார்கள் சாதாரணமாக அவர்களாகவே முன்வந்து எதனையும் செய்துவிடமாட்டார்கள் என்ற நடைமுறையினைத் தாரளாமாக ஏற்படுத்தி விட்டிருக்கின்றார்கள், இதன் தாக்கம் தற்போதைய மீள்குடியேற்ற செயற்பாட்டிலும் அதிகமாக காணப்படுகின்றது.


எனவே மீளக்குடியேறவுள்ள சமூகத்திற்கு முதன்மையாக மீள்குடியேற்றம் குறித்த விளக்கங்களும் தெளிவுகளும் நம்பிக்கைகளும் வழங்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது, “மீள்குடியேற்றம் சார்ந்த சிந்தனைகளும் திட்டங்களும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் பரவலாக்கப்பட வேண்டும்”. இதற்கான ஒரு முயற்சியே “யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்” எனவே இந்த நிகழ்வானது ஒரு தனிப்பட்ட குழுவின் முயற்சியல்ல மாறாக சமூகத்தின் எல்லா அங்கங்களும் பங்கேற்கும் ஒரு சமூக நிகழ்வாகும். எனவேதான் இதற்கான தலைமைத்துவத்தை யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஏற்றுள்ளது.


ஒரு சமூகத்தில் பல்வேறு விருப்பு வெறுப்புடையவர்கள் இருப்பார்கள், அவர்களின் விருப்புகளுக்கு மார்க்கத்தின் வரம்புகளுக்குள் நின்று அனுமதியளிப்பதும் அவர்களை நெறிப்படுத்தி வழிகாட்டுவதும் எமது கடப்பாடாக இருக்கின்றது. எல்லோரையும் அங்கீகரிக்கின்ற மனோநிலையும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களால் சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஒழுங்குற சமூகத்தை அடையச்செய்வதும் எம் ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமையாகும்.


இவ்வாறான ஒரு பரந்துபட்ட நோக்குடன்தான் “யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்” நோக்கப்பட வேன்டும். வர்ண டியூப் லைட்டுகள், இலவச உணவு விநியோகம், பகலும் இரவும் முழங்கும் ஒலிபெருக்கிகள் எம்மவர்களுக்கு மீண்டும் சோனகர் தெருவின் வாழ்வை மீட்டிப்பார்க்கவும், அதன் மீது ஆசையையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணவும் உதவும் என்பது எமது நம்பிக்கை. அதனால் தானும் மீளவும் குடியேற வேண்டும் என்ற நம்பிக்கை அவனுள் தோன்றும் என்பது எமது நம்பிக்கை. இன்னொரு வார்த்தையில் சொன்னால் “மீள்குடியேற்ற செயற்திட்டத்தை மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களுக்கு மீள்குடியேற்றத்தின் மீதான ஆர்வத்தையுண்டு பண்ணுவதே“ எமது பிரதான இலக்காகும். எனவே இந்த இலக்கை 100 வீதம் அல்லாவிட்டாலும் கணிசமான அளவிற்கு அடையமுடியும் என்பது எமது நம்பிக்கை.


அந்த வகையில் பெப்ரவரி 04ம் நாள் முதல் 07ம் நாள் வரை பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


1- மீள்குடியேற்றம் தொடர்பான விஷேட கலந்துரையாடல்கள்
2- இஸ்லாமிய சமூக அமைப்பு தொடர்பிலான விஷேட சொற்பொழிவுகள்
3- முஸ்லிம் சிறார்களுக்கான விஷேட இஸ்லாமியப் போட்டி நிகழ்ச்சிகள்
4- வாலிபர்களுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள்
5- அரச அதிகாரிகள் சகோதர சமூகத்தவர்களுக்கான விசேட ஒன்று கூடல்
6- முஸ்லிம் சமூகத்திற்கான பொதுக் கூட்டம்


இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இம்முறை ஒன்று கூடல் நிகழ்வை அலங்கரிக்க இருக்கின்றன.


இங்கே பலரது கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிட்ட நாட்களில் மீலாத் விடுமுறையும் உள்ளடக்கப்பட்டிருப்பதுதான், அது உண்மைதான். மீலாத் திகதிகளில் எமது நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை உண்மையில் மீலாத் நிகழ்வை மையப்படுத்தியதானதல்ல. மீலாத் நிகழ்வு என எதுவும் அங்கே இருக்கப்போவதிலை, அவ்வாறு ஏதேனும் ஏற்படுத்தப்படுமானல் அதற்கு நாம் உடந்தையானவர்களுமல்ல.


மாற்றமாக நீண்ட விடுமுறைகளும் பலருக்கு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டுவதுமே குறித்த திகதிகளை நாம் தெரிவுசெய்யக் காரணமாகும்.. எனவே இத்தகைய சாதகமான பல்வேறு அம்சங்களை இவ்வொன்று கூடல் நிகழ்வு தன்னகத்தே கொண்டிருக்கின்றது.


மேலும் இது ஒரு சமூக செயற்பாடாகும், யாழ் முஸ்லிம் சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இதில் பங்காளிகளே யாரையும் நாம் தூரத்தே வைத்துப்பார்க்க விரும்பவில்லை, எல்லோரது கருத்துக்களையும் அங்கீகரிக்கின்ற முடியுமானவரை அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றோம். எனவே எவ்வித தயக்கமும் இன்றி தங்களது மேலான கருத்துக்களை நேரடியாக எமக்குத் தெரியப்படுத்துங்கள். அவை எம்மால் சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.


யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற செயற்திட்டம் வெற்றிபெற நாம் அனைவரும் முயற்சிப்போம் ஒத்துழைப்போம் இறையருள் வேண்டிப் பிரார்த்திப்போம்..!!

5 comments:

  1. ''மேலும் இது ஒரு சமூக செயற்பாடாகும், யாழ் முஸ்லிம் சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும்
    இதில் பங்காளிகளே யாரையும் தூரத்தே வைத்துப் பார்க்க நாம் விரும்பவில்லை, எல்லோரது கருத்துக்களையும்
    அங்கீகரிக்கின்ற முடியுமானவரை அவற்றை நடைமுறைபடுத்த முயற்ச்சிகின்றோம். எனவே எவ்வித தயக்கமும் இன்றி தங்களின் மேலான
    கருத்துக்களை எமக்குத் தெரியப் படுத்துங்கள். அவை எம்மால் சாதகமாகப் பரிசீலிக்கப் படும்.'' என்று அஸ்மின் மவ்லவி குறிப்பிட்டுள்ளதை நம்பி எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
    இந்த நிகழ்வுக்கான தேவை குறித்த வாதப் பிரதிவாதங்கள் நீண்ட நாட்களாகவே தொடரும் நிலையில் , நான்கே நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் வேளையில் இவ்வளவு தாமதமாகவா இது குறித்து வாய் திறக்க வேண்டும்? நேர காலத்துடன் இந்தத் தளத்தில், ஏற்பாட்டாளர்கள் சார்பில் பேசியிருந்தால்,காத்திரமாக கருத்துத் தெரிவிக்க, மாற்றங்களை மேற்கொள்ள வசதியாக இருந்திருக்குமே.

    இந்த நிகழ்வுக்கு என்றில்லை, இது போன்ற எந்த நிகழ்வுக்காக இருந்தாலும் நான்கு நாட்களை ஒதுக்குவது கொஞ்சம் கூட பொருத்தமில்லை. ரொம்ப ஓவர். அதிக பட்சம் இரண்டு நாட்கள் போதுமானவை. பெப்ரவரி 04 , 05 திகதிகளுக்கு மட்டும் இந்நிகழ்வை மட்டுப் படுத்தியிருந்தால், ''மீலாத்விழா, கொண்டாட்டம்'' போன்ற சர்ச்சைகளே எழ வாய்ப்பிருந்திருக்காது. (இவ்வாறான ஆலோசனைகளை ஆரம்பத்தில் தவிர்க்கத்தான் கடைசி நேரத்தில் இந்த கட்டுரை கண்துடைப்பாக வெளியிடப்பட்டதா?)

    ''வர்ண டியூப் லைட்டுகள், இலவச உணவு விநியோகம், பகலும் இரவும் முழங்கும் ஒலிபெருக்கிகள் எம்மவர்களுக்கு மீண்டும் சோனகர் தெருவின் வாழ்வை மீட்டிப் பார்க்கவும், அதன் மீது ஆசையையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணவும் உதவும் என்பது எமது நம்பிக்கை'' என்று சொல்கின்றீர்களே, இதனையே மக்கள் வருடா வருடம் எதிர்பார்த்தால்? அடுத்து இரவும் பகலும் ஒலிபெருக்கிகளில் என்ன முழங்கப் போகின்றன? இசையுடன் கூடிய பாடல்கள், மவ்லீது, மார்க்கத்துக்கு முரணான பைத்துக்கள் என்பன முழங்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அஸ்மின் மவ்லவி அவர்களே, நீங்கள் மார்க்கத்தை படித்த ஒருவர் என்ற வகையில் இவற்றை முற்றாக தவிர்ப்பதற்கான
    பொறுப்பை உங்களால் ஏற்க முடியுமா? இலவச உணவு விநியோகம் நாரிசா என்ற பெயரில் வழங்கப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா?

    '' இஸ்லாமிய சமூக அமைப்பு தொடர்பிலான விஷேட சொற்பொழிவுகள்'' யாரால் இவை நிகழ்த்தப் படப் போகின்றன என்பதனை
    தெரிவிக்க முடியுமா?

    அஸ்மின் மவ்லவி அவர்களே, ''மீலாத் நிகழ்வு என எதுவும் அங்கே இருக்கப் போவதில்லை'' என அவைக்கு அடங்கும் உங்கள் வார்த்தைகள் அல்லாஹ்வின் மீது ஆணையாக மகிழ்ச்சியை தந்தாலும், அடுத்த வரியிலேயே, ராமாயணம் எழுதிய கம்பனின் பாணியில் ''அவ்வாறு ஏதேனும் ஏற்படுத்தப் படுமானால் அதற்கு நாம் உடந்தையானவர்களுமல்ல'' என அவையை அடக்க முயல்வது கவலையைத் தருகின்றது.

    ஏற்பாட்டாளர்கள் சார்பில் அஸ்மின் மவ்லவி என்னதான் விளக்கம் சொன்னாலும் , யாழ்ப்பாணத்தவர் பலர் ''இந்த வருஷம் கொண்டாட்டம் சோனகதெருவில் வெகு சிறப்பாக நடக்கப் போகின்றது" என்ற வகையில் தான் பேசிக்கொள்கின்றார்கள் என்பதனை மறுக்க முடியவில்லை.


    பிழையான ஒரு நிகழ்வுக்கு முன்னுதாரணம் அமைத்த, மறைந்து போன ஒரு அனாச்சாரத்துக்கு புத்துயிரூட்டிய பாவத்துக்கும், அல்லாஹ்வின் கோபத்துக்கும் ஆளாகாமல் இருக்கும்படியாக உங்களிடம் எல்லா நடவடிக்கைகளும் அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாவத்துக்கு வழி காட்டுவதும் பாவமே, அந்தப் பாவம் செய்யப்படும் காலமெல்லாம், அதற்கு வழி காட்டியவர்களும் பாவத்தில் பங்குதாரர்களாகவே இருக்கின்றனர் என்பதனை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

    அதே நேரத்தில், மீள் குடியேற்றம் என்பது வர்ண டியூப் லைட்டுகளுக்காகவும் , இரவும் பகலும் அலறும் ஒழி பெருக்கிகளுக்காகவும், இலவச உணவுகளுக்ககவும் மேற்கொள்ளப் படும் ஒன்றாக பார்க்கப் படுவது மாபெரும் துரதிஸ்டமே. யாழப்பாண முஸ்லீம் சமூகம் வர்ண டியூப் லைட்டுகளுக்காகவும் , இரவும் பகலும் அலறும் ஒழி பெருக்கிகளுக்காகவும், இலவச உணவுகளுக்ககவும் அலையும் பிச்சைக்காரனின் நிலையில் வைத்துப் பார்க்கப் படுவது மிகவும் கவலையளிக்கின்றது.

    மீள்குடியேற்றம் என்பது அறிவு பூர்வமாக, மக்களின் மனங்களில் தாம் பிறந்து வளர்ந்த மண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி
    மேற்கொள்ளப் படுவதே சிறந்தது. அவ்வாறு இல்லாமல் வர்ண டியூப் லைட்டுகளுக்காகவும் , இரவும் பகலும் அலறும் ஒழி பெருக்கிகளுக்காகவும், இலவச உணவுகளுக்ககவும் மீள்குடியேறும் ஒரு சமூகத்திடம் எதனை எதிர்பார்க்க முடியும்?

    அஸ்மின் மவ்லவி அவர்களே, மேலும் சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டப் போதுமானவனாக இருக்கின்றான்.

    அபூ அஸாம்

    ReplyDelete
  2. என்னை பொறுத்தவரை சிர்க கலக்காமல் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு கண்டிப்பாக தேவையானது . இரண்டு நாட்கள் மட்டும் போதும் என்று கூறுவதும் ஏற்கமுடியாது காரணம் பல நீட்களுக்கு ஏற்பாடுகள் இருந்தால்தான் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் பிரான்ஸ் , லண்டன் போன்ற நாடுகளில் இருந்தும் இதற்காக பிரயாண ஏற்பாடுகளை செய்து அங்கு வர ஆர்வமாகவும் ,இலகுவாகவும் இருக்கும் .

    ReplyDelete
  3. Gafoor சகோதரரே, சிர்க் மட்டுமல்ல, பித்அத்தும் கலக்கக் கூடாது.
    நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்துள்ளார்கள், ''அனைத்து
    பித்அத்துகளும் வலி கேடுகள், அனைத்து வழிகேடுகளும்
    நரகத்திற்கே''

    ஆகவே, பித்அத்துக்கள் கூட தவிர்க்கப் பட வேண்டும்.

    கட்டுரையை அனுப்பிவைத்த அஸ்மின் மவ்லவி
    இவற்றை பார்க்காமலா இருக்கப் போகின்றார்,
    ஏன் பதில் தர முன்வரவில்லை என்பது
    அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.


    அடுத்து, நீங்கள் 04 நாட்கள் தேவை என்பதற்கு சொல்லும்
    காரணமே ஆச்சரியமாக உள்ளது.
    லண்டனிலிருந்து வருகின்றார்கள்,பிரான்சிலிருந்து வருகின்றார்கள்
    என்பதற்காக ஹஜ்ஜில், அரபாவை நான்கு நாட்களுக்கு வைக்கச் சொல்லப் போகின்றீர்களா?

    ஏன், யாழப்பாண முஸ்லீம்கள் புத்தளத்தில் கலியாணம் முடிக்கின்றார்கள்,
    கொழும்பு, நீர்கொழும்பு,பாணந்துறை, அனுராதபுரம், லண்டன், மொஸ்கோ, இத்தாலி,
    பிரான்ஸ் இலிருந்தேல்லாம் சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்பதற்காக
    IBM ஐ 4 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, 4 நாட்களுக்கு விழாவும் விருந்துமா
    படைக்கின்றார்கள்?

    பொதுப்பணம் என்றால் இப்படித்தான் வீசி விளையாடுவதா?

    சின்னப்பிள்ளைத் தனமாக யோசிக்காமல்,லண்டன், கொழும்பு, பிரான்சிலிருந்து அப்படி யாராவது வேலை மெனக்கட்டு
    வருவார்கள் என்றால், நேரகாலத்தோடு வரவேண்டியது தானே...

    ReplyDelete
  4. யாரடா நீ மடையன் மாதிரி கைதைகிரா ????? நீ சொல்றா ''ஏன், யாழப்பாண முஸ்லீம்கள் புத்தளத்தில் கலியாணம் முடிக்கின்றார்கள்,
    கொழும்பு, நீர்கொழும்பு,பாணந்துறை, அனுராதபுரம், லண்டன், மொஸ்கோ, இத்தாலி,
    பிரான்ஸ் இலிருந்தேல்லாம் சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்பதற்காக
    IBM ஐ 4 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, 4 நாட்களுக்கு விழாவும் விருந்துமா
    படைக்கின்றார்கள்?'' அடேய் ஒரு நாள் ஊர் நிகழ்ச்சிக்கு இங்கிருந்து என்றால் ஆய்வம் எலோருக்கும் வராதடா அதே நேரம் நான்கு நாள் என்றால் வெளிக்கிட்டு வர வாய்ப்பு அதிகம் கல்யாண வீடு என்பது வேறு அது உறவு முறை அதற்கு ஒரு நாளாக இருந்தாலும் போகவேண்டும் அப்படி இருந்தும் எத்தனை கல்யானன்களை நாங்கள் தவற விட்டுள்ளோம் உனக்கு புரியுமா முதலாவது வடிவா யோசிடா

    ReplyDelete
  5. //யாரடா நீ மடையன் மாதிரி கைதைகிரா ????? நீ சொல்றா //

    இதை பார்த்தாலே புரிகின்றது உங்கள் பண்பாடும்,அறிவின் தரமும்.

    //முதலாவது வடிவா யோசிடா//


    இப்பொழுது புரிகின்றது, அல்லாஹ்வின் தண்டனை ஏன் யாழ்ப்பாண சமூகத்தின் மீது வந்தது என்று.
    உங்களைப் போன்றவர்கள் இன்னும் எஞ்சியிருப்பதால் அல்லாஹ்தான் சமூகத்தை காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete