யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் லிட்றில் எய்ட் நிறுவனம் புக் அப்றோட் –அமைப்பின் உதவியுடன் நூலகமொன்றை திறந்து வைத்துள்ளது. அண்மையில் இந்நூலகத்தை லிற்றில் எய்ட் அமைப்பின் திட்ட இணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் திறந்து வைத்தார்.நூலக திறப்பு நிகழ்வு அக்கல்லூரியின் அதிபர் மெளலவி முபாரக் தலைமையில் இடம்பெற்றது. யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தற்சமயம் 390 மாணவர்கள் கல்வி பயில்வதாகக் குறிப்பிட்ட அதிபர் முபாரக்; மாணவர்களின் எண்ணிக்கை 1000 மாக உயரும் எனவும் அவர்களுக்கு இந்நூலகம் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
72,000 முஸ்லீம்கள் 1990 ஒக்ரோபரில் இல் தங்கள் வாழ்விடங்களைப் விட்டு யாழில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிக்கொண்டுள்ளனர்.
இது பற்றிக் குறிப்பிட்ட அதிபர் முபாரக், இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையால் முஸ்லீம் சமூகத்தினரின் ஒரு பரம்பரையின் முழுமையான கல்வியே அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் முஸ்லீம் சமூகத்தினதும், தமிழ் சமூகத்தினதும் இருபது ஆண்டுகள் இழக்கப்பட்டு உள்ளதாகவும் இரு சமூகங்களும் அடைய வேண்டியவைகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலம் பற்றி, வடக்கில் படிப்பினை முடித்து வெளியேறுகின்றவர்களுக்கான வேலைவாய்புப் பற்றி தனது கருத்துக்களை வெளியிட்ட அதிபர் முபாரக்; இலங்கையின் வடபகுதியில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான வேலைவாய்ப்புகளுக்கு போட்டியிடுவதாகவும், ஒரே மாதிரியான வர்த்தகத்தில் போட்டியிடுவதாகவும் குறைப்பட்டுக் கொண்டார். இது சமூகத்தை அறிவியல் ரீதியாக வளர்க்கப் போவதில்லை என்றும், நீண்டகாலத்தில் நாட்டுக்கு நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான மாற்றுச் சிந்தனையை வெளியிட்ட அவர், முஸ்லீம் சிறார்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி வேறுபட்ட வேலைவாய்ப்புக்கான வர்த்தகத்துக்கான சந்தையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
யாழ் நூலகத்தை, முஸ்லீம் கல்லூரியை எரித்ததன் மூலம் அந்தச் சமூகங்களையோ அதன் பாரம்பரியத்தையோ துடைத்து அழிக்க முடியவில்லை என்பதை வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்த அதிபர் முபாரக்; அந்த சமூகங்களின் விழுமியங்களும் வரலாறும் மனிதத்துவமும் கற்களையும் கட்டிடங்களையும் காட்டிலும் மதிப்பானவை எனச் சுட்டிக்காட்டினார்.
அதிபர் முபாரக் மேலும் குறிப்பிடுகையில், யாழில் தற்போது பள்ளிவாசல்கள் இயங்குவதாகவும், இவை முஸ்லீம் சமூகத்தின் அத்திவாரமாக உள்ளதாகவும்; இப்பள்ளிவாசல்கள் சமூகத்தில் இடம்பெறுகின்ற உட்பிரச்சினைகளை, குடும்பப் பிரச்சினைகளுக்கு அரசகட்டமைப்புகளில், பொலிசாரில் தங்கி இராமல் தமக்கு உள்ளேயே தீர்வுகாண உதவுகின்றன என்றார்.
யாழில் உள்ள இப்பள்ளிவாசல்கள் அங்குள்ள தமிழ் சமூகத்துடன் அமைதியையும் நேசத்தையும் பேணுவதையும் அதிபர் முபாரக் சுட்டிக்காட்டினார். இறுதியாக, லிற்றில் எய்ட் அமைப்பு ஏனைய பொதுத் தொண்டு அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக, எல்லைகளைக் கடந்து, மனிதத்துவத்துடன் செயற்படுவதற்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment